ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பதுபோல் அமைந்த ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு இது. ஔசேபச்சன் சொல்லுகிற கதைகளில் வரும் கதாநாயகன் ஆண், பெண், மனிதன், விலங்கு, அரசன், அமைச்சர், போலீஸ், திருடன் என எவரும் இல்லை.
‘போலீஸ்-குற்றவாளி’ என்ற ஆட்டம், துப்பறிதல் அனுபவம், விசாரணைக் கட்டங்கள் என கதைக்குள் இழுக்கப்பட்டாலும், அதைவிட வேறொன்றை இக்கதைகள் கொண்டிருக்கின்றன; ஒரு மையவெளி.
ஒவ்வொரு கதையும் ஒரு சிறு திறப்பின் வழியாக நுழைந்து, விரிந்து விரிந்து சென்று ஒரு மையவெளியைத் தொடுகிறது. “சரி என்றும் தவறு என்றும் நிறுவி விடமுடியாத ஒரு வெளி உண்டு, அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்” என்ற ரூமி வரிகளில் வரும் வெளி போல அது விரிகிறது.

உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தின் பேரன்பின் மொழியை பேச முடிந்தவர்கள் இருப்பதை உணர்ந்த தருணம் ‘வேரில் திகழ்வது’ கதையின் தரிசனம்.
‘வேட்டு’ கதை முடியும் இடம் நாமே இட்டு நிரப்பிக்கொள்ளும் ஒரு வெற்றிடம். ‘ஓநாயின் மூக்கு’ அமானுஷ்யம் நிறைந்த ஒரு பேரனுபவம். ‘சரித்திரம்’ எனும் யட்ஷி தொடரும் நிறைவுபெறாத பகை. ‘பத்து இலட்சம் காலடிகள்’ கூறும் ‘பத்தேமாரி’ கப்பலின் கட்டுமானமும் மாப்பிளா சமூகத்தின் சித்திரமும் ஆச்சரியமளிக்கிறது.
‘கைமுக்கு’ கதையின் பரிணாம வளர்ச்சி ஒரு முழு வாழ்க்கையை நம்முன் விரிக்கிறது. நாம் ஏன் அறத்துடன் வாழவேண்டும் என்ற கேள்வியையே அது மெதுவாக எழுப்பிச் செல்கிறது. கதைநகர்வு எதிர்பாராத இடங்களைத் தொடுகிறது; அதன் வழியாக எளிய மனிதர்களின் வாழ்க்கையையே மீண்டும் வந்து சேர்கிறது. எத்தனை சிக்கலான உலகம் என்று ஒருபக்கம் வியப்பையும், மறுபக்கம் ஒரு வித வெறுப்பையும் உருவாக்குகிறது.