ஒரு தந்தை தினமும் காலை 4 மணிக்கு எழுகிறார். தியானம், யோகா போன்றவற்றை செய்கிறார். ஒரு கடுங்காப்பி அருந்திவிட்டு 5கிமீ ஓடுகிறார். இவரது மகனோ மகளோ இதனை பின்பற்றியதே இல்லை. மாறாக வேறு ஒரு வாழ்க்கை ஓட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
மற்றொரு தந்தையை ஒரு எழுத்தாளர். நடைப்பயிற்சி, தியானமுறை என இயல்பான தன் ஒழுக்கம் உடையவர். அவரின் மகன் முப்பதாவது வயதில் ஒரு புத்தகத்தை எழுதுகிறான். தந்தையின் வாழ்க்கை முறையை இயல்பாகத் தொடர்கிறான்.
தந்தைகள் அவர்களின் பிள்ளைகள் அடைந்த உயரத்தை ஒப்பீடு செய்யாமல் இதனைப் பார்க்க முயலுகிறேன். இரண்டு தந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைக்கு குழந்தைகள் முன் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை தானே அவர்களும் பின்பற்ற வேண்டும். நாம் கைப்பேசியை எடுக்காமல் தொலைகாட்சி மோகம் கொள்ளாமல் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ள பெற்றோராய் இருப்பின் அவர்களும் அத்தகைய வாழ்க்கை முறையே சரியென்று புரிந்துகொள்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் முதலாமவருக்கு இது ஏன் கைகூடவில்லை?
உங்கள் அக ஆழத்தில் என் அப்பாவைப் போல நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுண்டா? அப்பாவை பிடிக்கும் என்பது வேறு. அவரைப் போல ஒரு ஆளுமையாக வேண்டும் என்று நினைப்பது வேறு.
பிள்ளைகளுக்கு தந்தை அடைந்த உயரம் புரிவதில்லை. மாறாக அருகாமையை புரிந்து கொள்ள முடியும். எத்தனை அருகாமையை தந்தை பிள்ளைகளுக்கு அளிக்க முடியுமோ அதன் வழியாக தந்தையின் உயரத்தை பிள்ளைகள் காண்கிறார்கள். தங்களையும் அதன் நீட்சியாக நீட்டிக்கொள்கிறார்கள்.