லெய்டன் ஒரு திட்டமிடப்பட்ட நகரம் என்று குறிப்பிட்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களும் நகரத்தைச் சுற்றியிருந்த சிங்கெல் கால்வாய் வளையமும் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கியது. ஒவ்வொரு நுழைவாயிலும் ஒரு தூக்குப் பாலம் அல்லது திறக்கும் பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. கால்வாய்களில் கப்பல்களும் படகுகளும் தடையின்றிச் செல்வதற்காக அவை தேவையான நேரங்களில் உயர்த்தப்பட்டு இயக்கப்பட்டன. அவற்றை இன்றும் பராமரித்து வருவது எனக்கு சுவாரசியமாக இருந்தது.
எட்டு நுழைவாயில்களில் இன்று எஞ்சியிருப்பது கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள் மட்டுமே. மறைந்துபோன மற்ற ஆறு நுழைவாயில்களையும் அவை இருந்த இடங்களிலேயே டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(படத்தில் 1. மோர்ஸ்போர்ட் 5. செய்ல்போர்ட்)
மோர்ஸ்போர்ட்(Morspoort)
மேற்கு நுழைவாயில். இது முதலில் 1611 ஆம் ஆண்டு மரத்தால் கட்டப்பட்டது. பின்னர் 1669 ஆம் ஆண்டு கல்லால் மீண்டும் கட்டப்பட்டது.
இதன் அமைப்பு எண்கோண வடிவ குவிமாட அமைப்புடன் கூடிய டச்சு பொற்கால கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கிறது
De Morsch என்பதற்கு பழைய டச்சு மொழியில் சதுப்பு நிலம் என்று அர்த்தம். இந்த நுழைவாயிலுக்கு வெளியே உள்ள சதுப்பு நிலங்களின் காரணமாக மோர்ஸ்போர்ட் என அழைக்கப்பட்டது.
சில காலம் இந்த நுழைவாயில் சிறைச்சாலையாகவும், எதிரிகளைத் தூக்கிலிடவும் பயன்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பேச்சு வழக்கில் தூக்குமேடை வாயில் (Galgpoort) என்றும் அழைப்பர். 19 ஆம் நூற்றாண்டில் இராணுவ பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது.

(படத்தில் இன்றைய மோர்ஸ்போர்ட் நுழைவாயில் – சிங்கெல் அகழி மற்றும் தூக்குப்பாலத்தின் அமைப்பு)
செய்ல்போர்ட் (Zijlpoort)
1667 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செய்ல்போர்ட், அக்காலத்தின் Classicist கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இலக்கிய குழுக்கள் கூடும் இடமாகவும், ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளியாகவும் பின்னர் நகரத்தின் கிடங்காகவும் செயல்பட்டது.
கிழக்கு நுழைவாயிலான செய்ல்போர்ட் லெய்டனின் முக்கியமான நீர்வழிப் பாதையாக இருந்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கு கப்பல்களும் படகுகளும் வந்து செல்லும் பாதையாக செயல்பட்டது. துறைமுகப் பகுதிக்குச் செல்லும் வழியாகவும், செய்ல் நீர்வழி இணைப்பாகவும் இருந்தது. லெய்டன் நகரின் முக்கிய நீர்வழியான பழைய ரைன்(Oude Rijn) நதியுடன் இணைகிறது.

(படத்தில் இன்றைய செய்ல்போர்ட்)
நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய லெய்டன் நகரின் காற்றாலைகளையும் நுழைவாயில்களையும் கடந்து கால்கள் மையக்கோட்டையை நோக்கி இயல்பாகவே நகர்ந்தன.
(தொடரும்)