ஆறுமணிக்கு என்னைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார் அப்பா. மீண்டும் வந்திருப்பதாக அறிவிப்பு கேட்டது. விடுதி அறையிலிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடினேன். இரண்டு விடுதி வளாகங்களைக்கடந்து பிள்ளையார் கோவிலையொட்டி விடுதியின் முகப்பு.
வழியெல்லாம் மங்கலாகத்தான் தெரிந்தது. அப்பா மட்டும் தெளிவாகத் தெரிந்தார். கருப்பண்ணசாமி சிலையாட்டம். ஓடிப்போய் அப்பாவைக் கட்டிக்கொண்டேன். அழுகையும் படபடப்பும் அடங்க பத்து நிமிடங்களாவது ஆனது.
என்னை அணைத்திருந்தபடியே வாட்ச்மேனிடம் அப்பா சொன்னார், “எனக்கு ஹார்ட் அட்டாக் இருக்கு. அதான் ரெண்டாவது முறை கூப்பிட்டதும் புள்ள பயந்துருச்சு…”
என்னிடம் சிரித்தபடி, “லூசு… அரைமணி நேரமா நிக்கிறேன். பஸ் வரவேயில்லை. உனக்கும் காசு கொடுக்க மறந்துட்டேன். அதான் திருப்பி ஓடியாந்தேன். இதுக்குப் போய் ஏன் அழற?” என்றார்.
அவர் கொடுக்க நினைத்தது காசு தான். ஆனால் அதன்வழியே இந்த பிரபஞ்சம் எனக்குத் தந்தது வேறொன்றை. அப்பாவின் கடைசி அணைப்பு. சொல்லாமல் நிகழ்த்தப்பட்ட ஒரு விடைபெறுதல்.