லெய்டனில் ஒரு நாள் – 1

நெதர்லாந்தின் அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியக் காற்றாலைகள். அதைப் பார்ப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அது டச்சுக்காரர்களின் கண்டுபிடிப்பு இல்லை. பெர்சியாவிலிருந்து வந்த தொழில்நுட்பம்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் கோராசான் பகுதிகளில் அதன் ஆரம்ப வடிவமான செங்குத்துவடிவக் காற்றாலைகள்(vertical-axis windmills) இருந்தன.

அஸ்பாத்(Asbad) எனப்படும் இக்காற்றாலைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்போது அவை செயல்பாட்டில் இல்லை. தொல்லியல் மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

நெதர்லாந்து காற்றாலைகள் வருவதற்கு முன்னர் கடுமையான வெள்ளங்களைச் சந்தித்துள்ளது. கடல் மட்டத்தைவிட தாழ்வான இந்நாட்டின் புவியியல் அமைப்பே காரணம். கி.பி. 15ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், நீர் மேலாண்மையில் காற்றாலைகள் முக்கிய பங்காற்றின. டச்சு பொறியாளர்கள் மற்றும் நீர் மேலாண்மை நிபுணர்கள் கிடைமட்ட அச்சுக் காற்றாலைகளைக் கொண்டு (horizontal-axis windmills) நீரை வெளியேற்றினர். அவ்வாறு வெளியேற்றி மீட்கப்பட்ட நிலப்பரப்பு போல்டர்கள்(polders) என அழைக்கப்படுகின்றன. சதுப்பு நிலங்கள் உலர்த்தப்பட்டு விவசாய நிலங்களானதும் மக்கள் குடியேற்றமும் அதிகரித்தது.

மரத்தாலான இந்தக் காற்றாலைகள் தானியங்களை அரைக்க, எண்ணெய் தயாரிக்க, காகித உற்பத்தி செய்ய எனத் நெதர்லாந்தின் தொழில் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தன.

குறிப்பாக டச்சு பொற்காலமான 17ஆம் நூற்றாண்டில், கப்பல் கட்டுமானப் பணிக்குத் தேவையான மரங்களை அறுக்கும் காற்றாலைகள் பெரும் உதவியாக இருந்தன. அவ்வாறு உருவாக்கப்பட்ட கப்பல்களில் பயணித்த டச்சுக்காரர்கள், உலகின் பல பகுதிகளை அடைந்தனர். தமிழ்நாட்டின் பழவேற்காட்டில் தங்கள் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிக நிலையங்களில் ஒன்றையும் நிறுவினர் என்ற தொடர்பு, ஒரு அழகான வரலாற்று ஓட்டம்.

லெய்டன் ஒரு திட்டமிடப்பட்ட நகரமாக இருந்துள்ளது. அதன் பாதுகாப்புச் சுவர்கள் மீது 19 காற்றாலைகள் காவலர்களைப் போல நின்றிருந்தன. நகரச் சுற்றுச்சுவர்களின் வெளிப்புறம் அகழிகளும் தாழ்வான நிலங்களும், உட்புறம் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், மையத்தில் உயர்ந்து நின்ற லெய்டன் புர்க்ட்(Burcht van Leiden) கோட்டையும் அமைந்திருந்தன.

மோலன் தி வாக்(Molen de Valk) என்ற காற்றாலை வரலாற்றுத் தொடர்ச்சியாய் தானியங்களை அரைக்கும் காற்றாலையாக இன்றும் தன் பணியை செய்து வருகிறது. அதனோடு ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவருகிறது.

அகழிகளும், பாதுகாப்புச் சுவர்களும் இன்று சிங்கெல்பார்க்(Singel Park) என்ற 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை வளையமாக உருமாறியுள்ளது. அதன் வழியே நடந்து லெய்டன் நுழைவாயிலை அடைந்தேன். எனக்கு மதுரையும் காஞ்சிக் கோட்டையையும் நினைவுக்கு வந்துசென்றது.

(தொடரும்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top