வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் செல்லம் என்று சொல்லிவிட முடியாது.
விடுமுறை நாட்களில் மூவரும் சேர்ந்தே சாப்பிடும் வழக்கம். ஒருநாள் மதியம் சோறு, குழம்பு, பொரியல் , தட்டுகள் எல்லாம் பட்டாசாலைக்குப் போனது. நான் உருண்டைச்செம்பில் தண்ணீர் எடுத்துவரும் வழியில் கைநழுவியது. சத்தம் கேட்டு அப்பா வந்தார்.
ஒரு பொருளை ஒழுங்கா எடுத்துட்டு வரத்தெரியுதா? எதையெடுத்தாலும் கீழே போடு. நீயெல்லாம் எதுக்குத்தான் லாயக்கு?
வசவு விழும்போதே அடுப்படிக்குள்ளிருந்து டங்..கென்று சத்தம்.
உள்ளேபோய் பார்த்தால் தண்ணீரை தாரைவார்த்துக் கொண்டு தனக்குடம் பட்டாசாலைவரை உருண்டோடியது. அம்மாவிடம் நீதியரசர் என்ன சொன்னார் தெரியுமா?
கைத்தவறிடுச்சா? விடு..பூமா தேவிக்கு விட்டதா நினைச்சுக்க, போயிச் சாப்பிடுவோம்.
எட்டு வயதிற்கு சோதனை செய்யத்தான் தோன்றியது. கையில் பாதிநீர் இருந்த செம்பை அவர்களின் முன்னாலேயே கீழே போட்டேன்.
காதல் மன்னன் கோபத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார். குடத்துத் தண்ணீரோடு செம்புநீர் கலந்ததுபோல என் கண்ணீரும் ஒன்றானது.