முத்துக் குளித்தல்

நான் பார்க்கின்ற உலகத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் நமக்கு வெளியே இருக்கின்ற உலகம் நிஜமானதா அல்லது நமக்கு உள்ளே இருக்கின்ற உலகம் நிஜமானதா?

சூரியன் இன்று மறைக்கப்பட்டிருந்தது. மேகமூட்டங்கள் வென்றுவிட்டதாக தோற்றம் அளிக்கும் ஒரு காலை. சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிஜத்தை அந்த முழுமையை நான் அறிகிறேன். இந்த உடம்பு அறிந்திருக்கமுடியாது என்பதால்தான் விட்டமின் டியை மருந்தாக உட்கொள்கிறோம். அப்படியென்றால் மனிதஉடல் என்பதே முழுமையை அறிந்துகொள்ளத் தடையாய் இருக்கிறதா? அத்தடையை பொருட்படுத்தாதவர்கள் ஒருவேளை முழுமையைக் கண்டடைந்திருக்கலாம்.

மனித உடலின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது ஒரு சுழற்சி. நமக்குக் கொடுக்கப்பட்ட மனித உடலை நாம் பயன்படுத்தத் தவறுகிறபோது அது நம்மை பயன்படுத்திக்கொண்டு திளைக்கிறது.

முழுமையறிதல் என்பது தன்னையறிதலா, தன்னுணர்வை அறிதலா? மனித உடல் நமக்கு எதற்குக் கொடுக்கப்பட்டது? உண்டு செரித்துத் திளைப்பதற்கா? அதைக் கொண்டு நாம் என்னவெல்லாம் அறிந்துகொள்கிறோம்? அவன் நல்லவனா கெட்டவனா? என் நண்பனா என் எதிரியா? நன்மையா தீமையா? இவை அல்ல, நாம் அறிந்துகொள்ள வேண்டியவை. நம் உணர்வுகளை.

இந்த மனிதஉடல், மனம் எனக்கு என்ன உணர்வுகளைத் தருகிறது? எதனால் அந்த உணர்வு மேலெழுகிறது? என்னுள் இன்னும் ஆழம் செல்கிறேன். நான் எதைக் காண்கிறேன், அதை எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறேன்?

ஒரு குழந்தை இந்த பூமிக்கு பிறப்பதிலிருந்து தொடங்குகிறது. பார்ப்பவற்றை மட்டும் முதலில் அறிந்துகொள்கிறது. இந்த உலகத்தை சேகரித்துக் கொள்கிறது. வளர்ந்த மனிதனுக்கு அந்த நினைவுக்கடலிலிருந்தே உணர்வுகள் பொங்கிவருகிறது. ஒவ்வொரு நாளும் தன்னுள் பொங்கிவரும் உணர்வுகளைப் பற்றிக்கொண்டு ஆழம் செல்லும் மனிதன் ஞானம் என்ற முத்தை எடுக்கிறான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top