பள்ளிவளாகம் முழுவதும் இலைச்சருகுகள் சிறு பொற்குவியல்களாக குவிக்கப்பட்டிருந்தன. நுழைவாயிலின் இடப்பக்கம் கரும்பலகையில் என் பெயரைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
“டேய், வாழ்த்துக்கள்டா..!” பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
துள்ளலோடு திரும்பினேன்.
சுருள் முடி மண்டை. சவரம் செய்யப்பட்ட முகம். அளவான மீசை. கழுத்தை நெரிக்கும் காலர் பட்டனிலிருந்து சட்டைக்கை பட்டன்வரை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு. தமிழும் சரி, தமிழய்யாவும் சரி, எதிலும் சமரசம் செய்து கொண்டதில்லை.
“ஐயா, தமிழ்ல பார்த்தீங்களா? 196 மார்க்கு வாங்கியிருக்கேன். பி.ஏ. தமிழ் படிக்கப்போறேன், என்ன சொல்றீங்க?”
“வேண்டாம்டா, தொழில்முறைப் படிப்பு படி. அதற்குத்தான் மரியாதை”
விடைபெறும்போது, பொற்குவியல்கள் எல்லாம் குப்பைவண்டிக்குள் ஏற்றப்பட்டிருந்தன.