ஒரு காஃபியை போல..!

வாழ்வின் கனமான பக்கங்களை
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
காலிப்பக்கங்கள் உண்மையில்
கண்ணீர் காய்ந்த சருகுகள்
இச்சருகுகளுக்கு உன்
வாசனைத் திரவியம் பூசுகிறேன்

கனத்த இதயத்துடன்
நுரையீரலை நிறைத்து
மெல்ல இலகி
நினைவலகளில் நீந்துகிறது
இந்நீச்சல் என் பேரமைதி
நீ நீங்காத நாட்களில்,
நீ நிலைத்திருந்த நேரங்களில்,
என்னோடிருந்த புன்னகை..!

நான் தூங்குவதற்காக விழித்திருந்த விழிகள்,
இன்று மிகத் தொலைவில்
ஏதோ ஒரு பிரபஞ்சத்தில்
உறங்கிக்கொண்டிருக்கிறது

உன் குரலாய் உன் சாயலாய்
உன் மணமாய் உன் குணமாய்
உன் அன்பாய் உன் கருணையாய்
நீ எனைச் சூழ்ந்திருக்கிறாய்
என்பதை நம்புவதற்காக
ஒரு வாசனைத்திரவியம் போதும்
ஒரு காஃபியை போல..!

Scroll to Top