இன்றைய நாளில் நான் வெளிக்காட்டிய ஒன்றை நாளை நான் பெறுவதற்கு கடமைப்பட்டவன் ஆவேன். யாரும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கு காரணம் ஏற்க முடியாது.
பக்கத்துவீட்டுக்காரன் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு அளவு கடந்த பொறாமை. ஆற்றாமையில் பிதற்றுகிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பதல்ல விவாதப்பொருள். எதுவுமே செய்யாத நான் இந்த வசையை எதற்காக பெற வேண்டும் என்ற சிந்தனையே தெளிவு தரும். அவன் கேடு நினைப்பவன் என்று வெறுமென பழி போட்டுக்கொள்ளும் நம் மனதிடம் ஒரு சிறுவிடுப்பு, ‘என் எல்லா தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும் எவனோ ஒருவன் காரணம் என்றும் என் எல்லா வெற்றிகளுக்கும் இன்பங்களுக்கும் நானே தான் காரணம் என்றும் பிதற்றும் எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிந்தாலொழிய நான் சொல்லப்போவது புரியாது’. அங்கு வசிக்க முடிவு செய்ததிலிருந்து என்னுடைய ஏதோ ஓர் செயல் பிடிக்காதுபோய் வெளிப்படுத்தும் வன்மம்தான் அது. வன்மம் எல்லாருக்குள்ளும் உண்டு தானே. இதற்காக அவனை ஒதுக்கிவிடலாமா?
இதற்கு தீர்வு, இரண்டு மட்டுமே. பேச முயல்வது அல்லது அமைதியோடு கடந்துவிடுவது. இதில் சரி தவறு விருப்பு வெறுப்பு என்று எதுவும் இல்லை. என் தீர்வின் விளைவே என் அடுத்த சில நாட்களின் வெளிப்பாடு என்ற தெளிவு அவசியம். சரி தவறு என்ற கோடு கிழிக்கமுடியாத வாழ்வின் பல பக்கங்களில் நம் முடிவுகளுக்கு நாம் மதிப்பளித்து நிலைத்திருத்தல் அவசியம். முதல் முடிவில் பேசி முயல்வதற்கான அத்தனை முயற்சிகளிலும் தோற்ற பிற்பாடு ‘அமைதியோடு போயிருக்கலாம்’ என்ற எண்ணமும், இரண்டாவது முடிவில் அமைதியைத் தொடரமுடியாமல் ‘முதல் நாளே பேசிவிட்டிருந்தால் இத்தனை நாள் வளர்ந்திருக்கவேண்டிய தேவை இருந்திருக்காது’ என்ற எண்ணமும் மிஞ்சுமேயானால் நாம் எடுத்த முடிவிற்கு நாம் மதிப்பளிக்கவில்லை என்று பொருள்படும்.
நீங்கள் கொடுப்பதையே இவ்வுலகம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா;